Monday, June 11, 2012

கடலும் ஒரு பெண் தானே

கடலே ஒரு பெண்ணின் மனம் உன்னை போலவே ஆழம் என்கிறார்களே.. 
அதனால்தானோ உன்னை எல்லோரும் கடல் "தாய்" என்று அழைகிறார்கள்..

ஆம் நீ ஒரு பெண் தான்..அதுவும் ஒரு காதலி, உன் அலை ஓசையே ..வளையோசை ..
பொழுது சாயும் கதிரவன் உன்னை முத்தமிட்டு உன்னில் கலந்து 
மீண்டும் எழுந்து.. அவனுடன் நீ பள்ளியறை பாடம் பயில்கிறாய்..
காதல் ஜோடிகள் உன்னை தேடி வரும் சமயம் உன் அலை
வெள்ளத்தை காட்டி கிளர்ச்சி ஊட்டுகிறாய்!
முழு நிலவின் மெட்டிற்கு நீ துள்ளும் வேகம்
பார்த்துதான் ஆடல் பயின்றார்களோ!

நீ ஒரு தாயும் கூட ...ஓடி ஒளிந்து மீண்டும் பொங்கி வந்து குழந்தைகளிடம்
ஓடி பிடித்து விளையாடுகிறாய், உன்னுள் வளர்த்த ஜீவன்
அதை தந்து பசிக்கு மருந்தாகும் நீ ஒரு தாய் தான்!
அமைதி என்று வரும் உன் பக்தர்களுக்கு அவர்
கண்ணீரை எல்லாம் உள் வாங்கி வேண்டும் 
அமைதி தருகிறாய்.உப்பு கரிக்கும் உன்
தண்ணீரெல்லாம் அவர் கண்ணீரோ? 

நீ ஒரு சிறந்த ஆசானும் கூட..அது உனக்கு தெரியுமா? 
உன்னுள் புகுந்து முத்து குளிப்பதுபோல், என்னுள்
புகுந்து நானும் ஆனந்தம் எனும் முத்தெடுக்க 
பயில்கிறேன்! 

அன்றாடம் உன் கரையோரம் பதியும் கால் தடங்கள்..வந்து போன 
சுவடு தெரியாமல் துடைக்கிறாய்.. எனக்கு தோன்றுகிறது..
"மனிதா ..இன்பமோ துன்பமோ.. நாளை என்பது மீண்டும் 
திரும்பும், பழதை மறந்து புதிதாய் தொடங்கு" என்கிறாயோ! 

ஒரு மாபெரும் உலகத்தையே உன்னுள் அடக்கிக்கொண்டு, 
"இந்த பூனையும் பால் குடிக்குமா" என்று நீ இருப்பதுஉன் 
எளிமையின் உச்சகட்டம்..

இது அத்தனையும் செய்யும் நீ.. சுனாமி வேகத்தில் அப்பாவி
உயிர்களை ஏன் குடித்தாய்? அது சரி! நீயும் ஒரு பெண் தானே!
குணம் இருக்கும் இடத்தில்தானே கோவமும் இருக்கும்! 

No comments:

Post a Comment